காந்திநகர்
இந்த ஆண்டில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குஜராத்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
குஜராத் மாநில தலைநகர் காந்தி நகரில் குஜராத்தி மொழி வளர்ச்சி குறித்து கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. “சிந்தன் ஷபிர்” எனப் பெயரிடப்பட்ட இந்த கருத்தரங்கில் குஜாராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, கல்வி அமைச்சர் பூபெந்திரசிங் சுதாசமா மற்றும் பல கல்வியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
அந்த கருத்தரங்கில் முதல்வர் விஜய் ரூபானி, “குஜராத்தி மொழி முன்னேற்றத்துக்காக இந்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக இந்த வருடம் கல்வி ஆண்டில் இருந்து மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குஜராத்தி மொழி கட்டாயப் பாடமாக்கப் படுகிறது. மாநில கல்வி முறை, சிபிஎஸ்ஈ, ஐசிஎஸ்ஈ உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை குஜராத்தி மொழி கட்டாயப் பாடமாக்கப் படுகிறது.: எனத் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் பூபேந்திரசிங், “முதல்வர் குஜராத்தி மொழியின் எதிர்காலத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அதை கருத்தில் கொண்டு குஜராத்தி மொழி பாடத் திட்டங்களை வலுவாக்க ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. தற்போது எட்டாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாக்கப்பட உள்ள குஜராத்தி மொழி விரைவில் அனைத்து வகுப்புக்களுக்கும் கட்டாயப் பாடமக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.