ராஜ்கோட்: புகழ்பெற்ற ஆன்லைன் பொழுதுபோக்கான PubG விளையாட்டை தடைசெய்யும்படி, தன் கீழ்பட்ட நிர்வாகங்களுக்கு குஜராத் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில், ராஜ்கோட் நகர காவல்துறை இந்த விளையாட்டிற்கு தடைவிதித்துள்ளது. இந்தத் தடையுத்தரவு மார்ச் 9 முதல் ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும்.
மாணவர்கள் தங்களின் இறுதியாண்டு தேர்விற்கு சிறப்பான முறையில் தயாராகி, செயல்படும் வகையில் இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த விளையாட்டில் மாணாக்கர்கள் மட்டுமல்ல, இளைஞர்களும் அதிக நேரம் செலவிடுவது அதிகரித்துள்ளது.
இந்த ஆன்லைன் விளையாட்டானது இளைஞர்களிடையே வன்முறை எண்ணத்தை அதிகரிக்கிறது என்று குற்றம் சாட்டப்படுவதோடு, அவர்களின் கல்வி செயல்பாடுகளையும், தகவல்-தொடர்பு திறன்களையும் பாதிப்பதாக கூறப்படுகிறது.
தடையுத்தரவை எவரேனும் மீறினால், பிரிவு 144 -ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை பெற்றோர் தரப்பில் ஆதரிக்கும் அதேவேளையில், வேறு பக்கமிருந்து எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ளன.
இந்தத் தடையின் மூலம், இந்த விளையாட்டு மறைமுகமாக விளையாடப்படும். மேலும், இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று இந்த விளையாட்டுப் பிரியர்கள், தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.
– மதுரை மாயாண்டி