ஆமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் பழங்குடி கிராமம் ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளியில் படிக்க 3 கி.மீ. தூரம் தண்ணீரில் நடந்து சென்று வரும் தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள தபோய் பகுதியில் அமைந்துள்ள சிறு கிராமம் பிரதாபுரா. இங்கு இரு நூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் பழங்குடியின மக்கள்.
இந்த கிராமத்தில் இருந்து பள்ளி, மருத்துவமனை போன்ற முக்கிய இடங்கள் ள்ள பகோடர் கிராமத்துக்குச் செல்ல குறைந்தது மூன்று கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். இதற்கு சாலை வசதி இருக்கிறது. ஆனால் அந்த சாலை குண்டும் குழியுமாக மிக மோசமாக இருக்கிறது. தற்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சாலை மிக மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்ல, மாணவர்கள் மூன்று கிலோ மீட்டர்கள் தண்ணீரில் நடக்க வேண்டியிருக்கிறது.
இது குறித்து அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் இந்த அவல நிலை குறித்து சமூகவலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி தத்வி, “ சாலையை சீரமைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.