அகமதாபாத்:
குஜராத்தில் பிரதமர் மோடியின் சொந்த ஊர் அடங்கியுள்ள தொகுதியில் பாஜக, காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்துள்ளது.
குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. எனினும் பிரதமர் மோடி பிறந்த ஊரான வாட்நகர் அடங்கியுள்ள மேஹ்சானா மாவட்டம் உஞ்ஜா சட்டமன்ற தொகுதியில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆஷா படேல், பாஜக வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏ.வுமான நாராயண் படேலை 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
79 வயதாகும் நாராயண் 2012ம் ஆண்டில் ஆஷா படேலை (வயது 40) தோல்வி அடைய செய்தார். ஆனால், தற்போது இந்த தொகுதியில் காட்சிகள் மாறியுள்ளது. படேல் சமூகத்தின் இடஒதுக்கீடு போராட்டம், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த தாகூர் சமுதாய மக்களினால் பாஜக தோல்வி அடைய நேரிட்டுள்ளது.
இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2.12 லட்சம் வாக்காளர்களில் 77 ஆயிரம் பேர் பட்டிதார்கள். 50 ஆயிரம் பேர் தாகூர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். வாட்நகரில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ரா குல்காந்தியும் பிரச்சாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.