டில்லி:
கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட மசூதிகளை சீரமைக்க குஜராத் அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கலவரம் வெடித்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மசூதிகள் சேதப்படுத்தப்பட்டது. இதை சீரமைக்க குஜராத் மாநில அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து குஜராத் பாஜ அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. கூடுதல் அரசு வக்கீல் துஷர் மேத்தா அரசு சார்பில் ஆஜராகி வாதாடினார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பி.சி. பந்த் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
பொதுமக்கள் நிதி மத வழிபாட்டு தளங்களை சீரமைக்க பயன்படுத்தக் கூடாது என்று குஜராத் அரசு வாதிட்டது. மேலும், ஏற்கனவே வேறு ஒரு திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட ஒரு தொகை சேதத்தை சீரமைக்க வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மசூதிகளை சீரமைக்க மாநில அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து உத்தரவிட்டனர்.
[youtube-feed feed=1]