அகமதாபாத்: ஷாப்பிங் மால்கள், மல்டிப்லெக்ஸ் காம்ப்ளக்ஸ்கள் போன்றவை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இலவச பார்க்கிங் வசதியை செய்துத்தர வேண்டுமென்றும், அவர்களிடமிருந்து கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது குஜராத் உயர்நீதிமன்றம்.

குஜராத் கட்டடங்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் சட்டங்கள் குறித்து விளக்கமளிக்கையில், இந்த தீர்ப்பை அளித்தது தலைமை நீதிபதி இடம்பெற்ற அமர்வு. அதாவது, அத்தகைய வணிக நிறுவனங்களை நடத்தும் உரிமையாளர்கள், பார்க்கிங் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது அத்தியாவசியம் என்பதே நீதிமன்றத்தின் தீர்ப்பு.

பார்க்கிங் கட்டணங்களை முறைப்படுத்துவதற்கேற்ப மாநில அரசு விதிமுறையை உருவாக்க வேண்டுமென்று, குஜராத் உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த மால் உரிமையாளர்களின் மனுவை விசாரித்த தலைமை நீதிபதியின் அமர்வு இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.

ஆனால், மேல்முறையீடு செய்ததன் மூலம் இருப்பதையும் கெடுத்துக்கொண்ட கதையாக ஆகிவிட்டது மால் உரிமையாளர்களுக்கு. தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தவறுள்ளது என்று சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதியின் அமர்வு, பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது மால் உரிமையாளர்களின் உரிமை என்பதை முற்றிலும் நிராகரித்துவிட்டது.

[youtube-feed feed=1]