அகமதாபாத்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் குஜராத் மாநிலத்தில் மிகவும் குறைவாக உள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் 1273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக அளவில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தவர் உள்ளனர். குஜராத் மாநிலத்தில் மட்டும் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று குஜராத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் குஜராத் மாநிலத்தில் 13 பேர் உயிர் இழந்துள்ளனர். சுமார் 5 நாட்களுக்கு முன்பு இந்திய அளவில் ஆறாம் இடத்தில் இருந்த குஜராத் மாநிலம் 2 ஆம் இடத்துக்கு வந்துள்ளது.
அத்துடன் நாடெங்கும் சுமார் 3960 பேர் முழுமையாகக் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பி உளனனர். அதாவது பாதிக்கப்பட்டோரில் சுமார் 19% குணம் அடைந்துள்ளனர். ஆனால் குஜராத்தில் மொத்தம் உள்ள 2272 பாதிக்கப்பட்டோரில் 144 பேர் மட்டுமே குணம் அடைந்துள்ளனர். இது வெறும் 6.3% மட்டுமே ஆகும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவில் குஜராத் மாநிலத்தில் குணம் அடைந்துள்ளனர்.
பல விஷயங்களில் மாதிரி மாநிலம் எனப் புகழப்படும் குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் குணம் அடைந்தோர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது வருந்தத்தக்கதாகும். குஜராத் மாநிலத்தில் உள்ள பெரு நகரங்களான அகமதாபாத், சூரட் மற்றும் வடோதரா ஆகிய நகரங்களில் மொத்த பாதிப்பு 1434, 364 மற்றும் 207 என உள்ளது. இதில் அகமதாபாத் நகரில் 3.95, சூரத் நகரில் 3% மற்றும் வடோதராவில் 3.8% ,மட்டுமே குணம் அடைந்துள்ளனர்.
இது குறித்து குஜராத் மாநில சுகாதார தலைமைச் செயலர் ஜெயந்தி ரவி, “மாநிலத்தின் முதல் கொரோனா நோயாளி கடந்த மார்ச் மாதம் 19 அன்றுதான் கண்டறியப்பட்டார். எனவே குணமடைந்தோர் எண்ணிக்கை இனிமேல்தான் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர் குணமடையக் குறைந்தது 12 நாட்கள் ஆகலாம். எனவே விரைவில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கொரோனா நோயுடன் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டோர் அதிக அள்வில் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தோர் வெறும் 1.39% மட்டுமே ஆகும். நாங்கள் இதனால் மூத்த குடிமக்களையும் வேறு நோய் உள்ளவ்ர்களையிம் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.