அகமதாபாத்: குஜராத் மாநில பாரதீய ஜனதா அரசாங்கம் தரவுகளைத்தான் மேலாண்மை செய்கிறதே தவிர, கொரோனா வைரஸை அல்ல என்று கடுமையாக விமர்சித்துள்ளனர் மருத்துவ நிபுணர்கள்.
அந்த மாநிலத்தில் கொரோனா மரண விகிதங்கள் நாட்டிலேயே மிக அதிகமாக இருக்கும் சூழலில், பரிசோதனை விகிதமோ மிகவும் குறைவாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
குஜராத்தில், கொரோனா வைரஸ் தொற்றினால் இறப்போரின் விகிதம், நாட்டிலேயே மிக அதிகமாக உள்ளது. அதேசமயம், பரிசோதனை விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால், இந்த முரண்பாட்டை அம்மாநில அரசாங்கம் மறுப்பதுதான் வேதனை என்கின்றனர்.
பரிசோதனை அளவைக் குறைப்பதற்கு அம்மாநில அரசு முயற்சித்து வந்ததும் தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்காக அனுமதிக்கப்படும் யாருக்கும், அரசின் அனுமதி இல்லாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளக்கூடாது என்று போடப்பட்ட உத்தரவே அதற்கான பெரிய சாட்சியாக உள்ளது. ஆனால், அரசின் இந்த உத்தரவை, கடந்த மே 29 தேதி குஜராத் உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது.
“பாதுகாப்பு உணர்வைப் பெறுவதற்காக, அறிகுறியற்ற நபர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை அனுமதிக்கப்பட்டால், பயம் என்கிற மனநோய்க்கான வாய்ப்பை அகற்ற முடியாது” என்று உயர்நீதிமன்றத்தில் குஜராத் மாநில அரசு தெரிவித்ததிலிருந்தே இதை மேலும் புரிந்துகொள்ளலாம் என்கின்றனர் விமர்சகர்கள்.