காந்திநகர்: குஜராத் சட்டமன்ற தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் 4 பேரணிகளில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
குஜராத் மாநிலத்தில் 22 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக ஆட்சி அமைத்து வருகிறது. இந்த நிலையில், அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் டிசம்பர் 1ந்தேதியும், 2வது கட்ட தேர்தல் டிசம்பர் 5ந்தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ந்தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரசுக்கு போட்டியாக ஆத்ஆத்மியும் களமிறங்கி உள்ளதால், அங்க கடுமையான மற்றம் மும்முனை போட்டி நிலவி வருகிறது. அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. 3 கட்சிகளும் மக்களை கவரும் வகையில், சகட்டுமேனிக்கு இலவச சலுகைகளை வாரியிறைத்து வருகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக போராடி வரும் நிலையில், ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றனர்.
ஆத்ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபை போல குஜராத்திலும் ஆட்சியை கைப்பற்ற வியூகங்களை வகுத்துள்ளார். ஏராளமான இலவச அறிவிப்புகளை வெளியிட்டு தீவிர பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, அங்கு 4 பேரணிகளில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி குஜராத்தின் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 2 பேரணிகளிலும், 2வது கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 2 பேரணிகளிலும் கலந்துகொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பார் என்றும், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காங்கிரஸ் பேரணிகளை நடத்த மாநில காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.