குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 43000 சதுர மீட்டர் (சுமார் 10.6 ஏக்கர்) நிலம் வாங்கியதில் பாஜக நிர்வாகிகள் மற்றும் அதானி நிறுவன அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஆறு குடும்பத்திற்குச் சொந்தமான விவசாய நிலத்தை வாங்கிய அதானி வெல்ஸ்பன் நிறுவனம் நிலத்தின் மொத்த மதிப்பையும் பணமாக பெற்றால் வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்புவார்கள் என்று கூறி அதன் ஒரு பகுதி பணத்தை தேர்தல் பத்திரத்தில் முதலீடு செய்தால் அது சில ஆண்டுகளில் 1.5 மடங்காக திரும்ப கிடைக்கும் என்று ஏமாற்றி தேர்தல் பத்திரமாக மாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த நிலத்தை விற்ற சாவக்கார மன்வர் என்பவரது மகன் ஹரேஷ் ‘தி குயின்ட்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :
“அதானி வெல்ஸ்பன் நிறுவனம் புதிதாக தொழில் தொடங்க தேவையான நிலத்தை மாவட்ட நிர்வாகம் மூலம் கையகப்படுத்த முயற்சி மேற்கொண்ட நிலையில் 2022 அக்டோபர் மாதம் அந்நிறுவனத்துடன் நிலத்தை விற்பதற்கு ஓராண்டு செல்லத்தக்க முதற்கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது.
குறிப்பிட்ட இடத்திற்கு சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ. 17,500 மதப்பீடு செய்து மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த நிலையில் மொத்த நிலத்திற்கு சுமார் ரூ. 76 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், நில உச்சவரம்பை மீறி நிலம் வைத்திருந்ததாகக் கூறி அந்த விலைக்கு வாங்க முடியாது என்று அதானி வெல்ஸ்பன் நிறுவனம் கூறியது.
இதனையடுத்து நில விற்பனை குறித்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்ட நிலையில் ஓராண்டு முடியும் தருவாயில் ஒப்பந்தம் காலாவதியாவதற்கு முன் 2023 ஆகஸ்ட் மாதம் இந்த நிலத்தை ரூ. 16,61,21,877 விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.
படிப்பறிவு அதிகம் இல்லாத எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலை ஏற்று இந்த நிலத்தை விற்பனை செய்ய முன்வந்த நிலையில் இதற்காக ரூ. 2,80,15,000 முன்பணமாக பெற்றனர்.
மீதி தொகை ரூ. 13,81,09,877 (பதிமூன்று கோடியே எண்பத்து ஒரு லட்சத்து ஒன்பது ஆயிரத்து எண்ணூற்று எழுபத்து ஏழு ரூபாய்) இந்த நிலத்தின் உரிமையாளர்கள் ஏழுபேரின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில், நிலத்தின் உரிமையாளர்களை அழைத்துப் பேசிய வெல்ஸ்பன் நிறுவன அதிகாரி மற்றும் உள்ளூர் பாஜக நிர்வாகி ஆகியோர், இவ்வளவு அதிக தொகையை வைத்திருப்பதன் மூலம் வருமான வரித்துறையில் இருந்து அழுத்தங்கள் வரும் என்று கூறி அதனை தேர்தல் பத்திரத்தில் முதலீடு செய்தால் ஒரு சில ஆண்டுகளில் நல்ல லாபத்துடன் திரும்பக் கிடைக்கும் என்று கூறி அதனை தேர்தல் பத்திரத்தில் முதலீடு செய்ய அறிவுறுத்தினர்.
அவர்களது வார்த்தைகளை நம்பி 11 கோடியே 14 ஆயிரம் ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தற்போது தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகள் வெளியான நிலையில் தங்கள் பெயரும் இதில் இடம்பெற்றிருப்பதை அடுத்து தேர்தல் பத்திர நிதி மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
2023, அக்டோபர் 1 முதல் அக்டோபர் 8 வரை தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகை மற்றும் அதிலிருந்து வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களுக்கான ரசீது மற்றும் பாஜக கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள 10 கோடி ரூபாய் மற்றும் சிவசேனா கட்சி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள 1 கோடியே 14 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றுக்கான ஆதாரம் மற்றும் நில ஆவணங்கள் மற்றும் அதானி வெல்ஸ்பன் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ஆகியவற்றுடன் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
அதானி வெல்ஸ்பன் நிறுவன அதிகாரிகள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் மீது வழங்கப்பட்டிருக்கும் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக இதுவரை யார் மீதும் வழக்கு தொடரவில்லை என்று கூறியுள்ளனர்.