அகமதாபாத்,
குஜராத்தில் பசுவதை செய்தால் பிணையில் வரமுடியாத குற்றமாக கருதி, ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் விலங்குகள் பாதுகாப்புத் தொடர்பாக குஜராத் கால்நடைகள் பாதுகாப்பு சட்டம் 1954 ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு மசோதா இன்று நிறைவேறியது.
இதுநாள் வரை மாட்டு இறைச்சி வைத்திருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும் அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமாக ரூ.50 ஆயிரமும் விதிக்கப்பட்டது. ஆனால் இனி மாட்டு இறைச்சி வைத்திருந்தால் ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், 7 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல இந்த வழக்கில் கைதானால் ஜாமீனும் கிடைக்காது. பசுக்களை பாதுகாக்க கடுமையான சட்டத்தை விரைவில் இயற்றப்போவதாக குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபாணி சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.