காந்திநகர்: முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் குஜராத்தில் காலை 11மணி நிலவரப்படி 18.8 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஜாம்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது மனைவியும் பாஜக வேட்பாளருமான ரிவாபா ஜடேஜா இன்று ராஜ்கோட்டில் வாக்களித்தார்.
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று காலை 8மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் இருந்து தங்களது வாக்கை பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். 89 சட்டசபை தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்கு பதிவு நடைபெற்று கொண்டு இருக்கிறது.
காலை 9மணி நிலவரப்படி, 4.92% பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகினது. இந்த நிலையில், காலை 11மணி நிலவரப்படி,18.8% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஜாம்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது மனைவியும் பாஜக வேட்பாளருமான ரிவாபா ஜடேஜா இன்று ராஜ்கோட்டில் வாக்களித்தார். அதுபோல, மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் மகள் மும்தாஜ் படேல் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, குஜராத் தேர்தலில், பா.ஜ., ஆட்சிக்கு எதிரான உணர்வை உணரும் என கூறியவர், நாங்கள் மாற்றத்தை வலியுறுத்துகிறோம், ஆனால் பாஜகவில் முதல்வர்கள் மாற்றப்பட்டனர், அதனால் அவர்கள் பதவிக்கு எதிரான உணர்வை உணர முடிகிறது என கூறினார்.
இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 89 சட்டசபை தொகுதிகளிலும் 718 ஆண் வேட்பாளர்களும், 70 பெண் வேட்பாளர்களும் இருக்கின்றனர். 18 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் 5 லட்சம் பேர் மற்றும் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் 49 லட்சம் பேர் 30 முதல் 40 வயது வரை 65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.