அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தல் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வுபெறுகிறது. இதையடுத்து அங்கு கடைசி கட்ட பிரசாரம் அனல்பறக்கிறது.
குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளும் மல்லுக்கு நிற்கின்றன. இதனால் மும்முனை போட்டி நிலவி வருகிறது. 3 கட்சிகளும் மக்களை கவர பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளன. தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலர் களமிறங்கி உள்ளனர்.
இந்த முறை பாஜகவுக்க டஃப் கொடுக்கும் வகையில் அங்கு ஆம்ஆத்தி களமிறங்கி உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும், குஜராத் கலவர வழக்கு குற்றவாளி மனோஜ் குக்ரானியின் மகள் பயல் குக்ரானி நரோடா தொகுதியிலும் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 4 பழங்குடியினர் தொகுதிகளில் காங்கிரஸ் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆம் ஆத்மியும் 3 பழங்குடியினர் தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை போட்டியிடச் செய்துள்ளது.
இந்த நிலையில், டிசம்பர் 1ந்தேதி முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில் நாளை (29-ந் தேதி) மாலை தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இதனால் அங்கு இறுதிக்கட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.