அகமதாபாத்:
குஜராத் மாநிலம் சூரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக  உயர்ந்துள்ளது.  இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது.
குஜராத்தில், பாஜகவைச் சேர்ந்த, முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான அரசு  செயல்பட்டு வருகிறது.  இங்குள்ள சூரத் மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களில், ஒன்பது பேர் மர்மமான முறையில் பலியாகி உள்ளனர். . இவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில், விஷச்சாராயம் போன்ற, ஆல்கஹால் கலந்துள்ள பானங்களை குடித்ததால், மரணம் ஏற்பட்டதாக  தெரிய வந்துள்ளது.
_f8ca94a8-9cc6-11e5-953e-ede5d8fc0602
குஜராத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, ஒன்பது பேர் மரணத்திற்கான காரணம் குறித்தும், கள்ளச்சாராயம் புழங்குவது குறித்தும் விசாரிக்க  அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் ஜவுளித்தொழிற்சாலையில், கூலி வேலை பார்ப்பவர்கள். ஆனால், இந்த மரணம் குறித்த காரணத்தை உறுதிப்படுத்த காவல்துறையினர் மறுத்து விட்டனர்.
மாவட்ட வளர்ச்சி அதிகாரி கே.ராஜேஷ் கூறுகையில், சம்பவம் நடந்த பகுதிகளில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். மரணம் சம்பவித்ததற்கான காரணம் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பலியானவர்களின் உடல் உறுப்புகள், காந்தி நகரில் உள்ள தடயவியல் மையத்தில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
வைரஸ் பரவல் காரணமாக இறப்பு நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். இதனால், உடல் உறுப்புகள், புனேயில் உள்ள தேசிய வைராலஜி மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அங்கு பணியில் இருந்த பல போலீஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர் மட்டக்குழுவை  மாநில அரசு அமைத்துள்ளது.
அதே நேரம், “குஜராத்தில் கள்ளச்சாராயம் கரைபுரண்டு ஓடுகிறது.  இது போன்ற பலிகள் நடப்பது இது முதல் முறை அல்ல. ஆனால் வெளிப்படையான தகவல்களை மாநில அரசு  சொல்ல மறுக்கிறது” என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன.