திருவண்ணாமலை
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமரிசையானதாகும். கடந்த 17 ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் தொடங்கியது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
தீப தரிசனம் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மலை ஏறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ,
”சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின்படி, தீபத்திருநாளான 26.11.2023 அன்று 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான 26.11.2023 அன்று காலை 05.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலைக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசைக் கிரமமாகப் புகைப்படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்படும். குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்கள் முதல் அதிக பட்சம் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அரசு அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகல் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவ அலுவலரிடம் உடல் தகுதி சான்று சமர்ப்பித்து அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். பக்தர்கள் கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.26.11.2023 அன்று பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப் படுவார்கள்.
மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும்போது திரும்பக் கொண்டு வர வேண்டும். மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதியில்லை.மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.
பக்தர்கள் மேற்கண்ட நிபந்தனைகளைத் தவறாது கடைப்பிடித்து அருள்மிகு அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்”
எனக் கூறப்பட்டுள்ளது.