கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களுக்கான கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை ஆட்சியர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.   மொத்த பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.   நேற்று 231 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,35,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   நேற்றுவரை 2,257 பேர் உயிர் இழந்து 2,31,156 பேர் குணம் அடைந்து தற்போது 2,091 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் அதிக அளவு பாதிப்புக்கள் உள்ளதால் இங்குப் பாதிப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அதைச் சரிவரப் பின்பற்ற வேண்டியது மக்களின் கடமை என அம்மாவட்ட ஆட்சியர் கூறி உள்ளார்.

மேலும் அவர், “கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து ஒரு வாரத்துக்கு முன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்குத் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.   தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி 50 நபர்களுக்கு மிகாமல் நிகழ்வு நடத்த வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள கண்காண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் மக்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.