சென்னை
தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்து வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், கடந்த 2020 மார்ச் மாதம் இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு படிப்படியாக விலக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனாவின் தாக்கமும் குறைந்துள்ளது. இதையொட்டி கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பரில் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. அத்துடன் நீட் தேர்வைத் தொடர்ந்து வாரியத்தேர்வுகளும் நடந்து வருகிறது.
ஆயினும் பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில்10, பியூசி வகுப்புகளுக்குப் பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதைப் பின்பற்றிப் பொங்கல் விடுமுறைக்குப் பின், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், முதல் கட்டமாக, பள்ளிகளைத் திறக்க அரசு பரிசீலித்து வருகிறது. இன்று தொடங்கி 8ம்தேதி வரை பெற்றோரிடம் கருத்துக்களைக் கேட்டு இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.
அந்த வழிகாட்டுதலில். ”வாரத்தில், 6 நாட்கள் வகுப்பு நடத்த வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் அதிகபட்சம் 25 மாணவர்கள் மட்டும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்ப மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றி, மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும். மாணவர்கள், ‘ஆன்லைன்’’ வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பினால், அனுமதிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள், பள்ளிக் கல்வி அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று, பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளிகளுக்கு வர, பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம் அவசியம். வருகைப்பதிவு கட்டாயமில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோர், முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம், சத்து மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படும். ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் ‘பயோமெட்ரிக்’’ வருகைப்பதிவை, தற்போது பயன்படுத்த வேண்டாம். பள்ளி வளாகத்தை, கொரோனா தொற்று தடுப்பு முறைப்படி, ‘சானிடைசர்’’ பயன்படுத்தி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அவசர உதவி, மருத்துவ உதவி, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் தொலைப்பேசி எண் மற்றும் விபரங்களை, பள்ளிகளில் பட்டியலிட்டு வைத்திருக்க வேண்டும்.
பள்ளி வளாகங்களுக்குள் மாணவர்கள் வரவும், வெளியேறவும், ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்களை ஏற்பாடு செய்ய வேண்டும். வானிலை சரியாக இருந்தால், திறந்தவெளியில், மரத்தடிகளில் வகுப்புகளை நடத்தலாம். விளையாட்டு, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., போன்ற நடவடிக்கைகளுக்கு, தற்போது அனுமதியில்லை. விளையாட்டு, மைதானங்களில், கலை, கலாச்சார நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.” எனக் கூறப்பட்டுள்ளது.