சென்னை,
பான் மசாலா, குட்கா 40கோடி லஞ்ச விவகாரத்தில் முதல்வரின் பதில் திருப்தியில்லை என திமுக வெளிநடப்பு செய்தது.
தடை செய்யப்பட்ட பான் மாலா, :’குட்கா’ உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்தில் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்காக, விற்பனையாளர்களிடம், ரூ.40 கோடி வரை லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் இன்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அப்போது, இந்த லஞ்ச விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி, இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது எனக்கூறினார்.
இந்த பதில் திருப்தியளிக்கவில்லை எனக்கூறி தி.மு.க., வெளிநடப்பு செய்தது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபை வெளியே ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
குட்கா லஞ்ச விவகாரத்தை நேற்று பேரவையில் பேச முற்பட்ட போது, ஆதாரம் இல்லாமல் பேச முடியாது என சபாநாயகர் கூறிவிட்டார்.
எனவே இன்று அந்த லஞ்ச விவகாரம் தொடர்பான ஆதாரங்களை திரட்டி சபாநாயகரிடம் கொடுத்ததை தொடர்ந்து சிறிது நேரம் பேச அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது தாம் குட்கா லஞ்ச விவகாரத்தில் முறையான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு வசதியாக லஞ்ச புகாருக்குள்ளாகியுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
கமிஷனர் ஜார்ஜ், டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகிய உயர் போலீஸ் அதிகாரிகளையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார்.
ஆனால் இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகவும், சம்பந்தமில்லாமலும் பொத்தாம் பொதுவாக பதில் கூறினார். குட்கா விவகாரத்தில் முதல்வர் விளக்கத்தை பூசி முழுகியுள்ளார். இந்த விவகாரத்தில் விசாரணை நாடகமாக நடந்து வருகிறது.
முதல்வர் உரிய பதில் தரவில்லை என்பதால் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.
இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் ஸ்டாலின் கூறினார்.