சென்னை,
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை அமைச்சரோ டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், உயிரிழப்பு குறித்தும் தவறான தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான, குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மானமிருந்தால் மான நஷ்ட வழக்கு போட வேண்டியதுதானே என காட்டமாக கூறி உள்ளார்.
தமிழகத்தில் பரவி வரும் டெங்கு கொசுவை ஒழிக்கவும், மக்களை டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாக்கவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் சார்பாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திமுக செயல்தலைவரான மு.க.ஸ்டாலின், தனது தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு பிரசார வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும், பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயத்தையும் அவர் வழங்கி ஆய்வுகள் மேற்கொண்டார்.
திமுக தொண்டர் ஒருவருடன் இரு சக்கரவாகனம் மூலம் வீதி வீதியாக சென்று குப்பைகள் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து, ஜேசிபி இயந்திரம்கொண்டு அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஸ்டாலின், எடப்பாடி தலைமையிலான ஆட்சி இன்றோ, நாளையோ கவிழலாம். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா பாஸ்கராக மாறி, தற்போது டெங்கு பாஸ்கர் ஆகி விட்டார். நயவஞ்சகத்தின் மறு உருவமே அமைச்சர் சி.விஜயபாஸ்கர்தான் என்று கூறினார்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அரசியல் பேசப்பட்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனது பணியை நான் செய்து வருகிறேன். என்மீது குறைகூறும் அமைச்சர், குட்கா விவகாரத்தில் எனது பேச்சுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு போடாதது ஏன்?. அவருக்கு மானமிருந்தால் என் மீது வழக்கு போட வேண்டும் என்றார்.
தற்போது மத்திய அரசு அமல்படுத்தி வரும் தூய்மை இந்தியா திட்டம் போன்ற ஒரு திட்டத்தை 1996ம் ஆண்டு நான் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, சிங்கார சென்னை என இத்திட்டத்தை செயல்படுத்தினேன் என்றும், என்மீது குற்றசாட்டு கூறுவதற்கு முன் பாஜக மாநில தலைவர் தமிழசை உண்மைகளை அறிந்துகொண்டு பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.