சென்னை: மத்தியஅரசு அமல்படுத்த உள்ள ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. வரி குறைப்பால் தமிழ்நாடு தேசிய சராசரியை விட மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரியை மத்திய பாஜக அரசு கொண்டுவரும்போது, அதை எதிர்ப்பதில், முதன்மையாக இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது ஜிஎஸ்டி வரியில் சில சீர்திருத்தம் செய்து, பொதுமக்கள் பயன்படும் வகையில், வரி குறைக்க எடுக்கும் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

GST வரி குறைப்பு அக்.2-ல் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் இந்த வரி குறைப்புக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
தற்போது புழக்கத்தில் உள்ள 4 வகையான ஜிஎஸ்டி வரியை இரண்டு வகையாக மாற்ற மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. அதாவது, தற்போது அமலில் உள்ள 5,12,18,28 என்ற ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை 5, 18 என்ற இரட்டை விகிதங்களை கொண்டுவர உள்ளது. இது தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த வரி குறைப்புக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்றும், பொருட்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், இந்த வரி குறைப்புக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதத்தால் தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலங்களுக்கும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற மாநில நிதி மந்திரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
தமிழ்நாட்டில், கடந்த 2024-25-ம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ஆகும். அதில் மத்திய அரசும், மாநில அரசும் பாதி, பாதி பகிர்ந்து கொள்ளும். அப்படியென்றால் தமிழகத்திற்கு அதில் ரூ.65 ஆயிரம் கோடி கிடைக்கும். அதில் 15 சதவீதம் இழப்பு என்று எடுத்து கொண்டால் கூட ரூ.9,750 கோடி இழப்பு ஏற்படும் என தமிழ்நாடு நிதிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தமிழக அரசுக்கு கடுமையான நிதி சுமை ஏற்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
,பெரும்பாலான மாநிலங்களை விட #USTariff தமிழ்நாட்டை எவ்வாறு கடுமையாக பாதிக்கும் என்பதையும், மத்திய அரசின் அவசர நடவடிக்கை ஏன் அவசியம் என்பதையும் நான் விளக்கியுள்ளேன்.
இதில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ள முக்கிய புள்ளிகள்:
▪ தமிழ்நாட்டின் ஏற்றுமதியில் 31% அமெரிக்காவிற்குச் செல்கிறது, இதனால் மாநிலம் தேசிய சராசரியை விட மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது.
▪ மாநில அரசு மானியங்கள், திட்டங்கள் மற்றும் ஆதரவை வழங்கியுள்ளது, ஆனால் அதன் திறன் குறைவாகவே உள்ளது.
▪ நிவாரண நடவடிக்கைகள், ஜிஎஸ்டி திருத்தம், கடன் ஆதரவு மற்றும் புதிய FTAக்களில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
என கூறியுள்ளதுடன், அத்துடன் செய்தித்தாளில் வெளியான செய்தி இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.
முதல்வரின் ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிர்ப்பு குறித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக முதல்வர் திரு @mkstalin 2021 வரை எதிர்க்கட்சியில் இருந்தபோது பல்வேறு பெயர்களில் ஜிஎஸ்டியை அழைத்ததன் மூலம் அதை அரக்கத்தனமாக சித்தரித்தார். ஆனால், இப்போது, ஜிஎஸ்டியை 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்துவது மாநிலத்தின் வருவாயைக் குறைக்கக்கூடும் என்று கவலைப்படுகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டில், ஜிஎஸ்டியை 18% ஆகக் கூட அவர் விரும்பினார்.
அவர் முதலில் நமது பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், மேலும் ஜிஎஸ்டியை செயல்படுத்துவது மாநில வருவாயை அதிகரித்தது, கடந்த காலங்களைப் போலல்லாமல், நலத்திட்டங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு அதிக நிதியை வழங்கியது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஜிஎஸ்டி செயல்படுத்தப்படுவதற்கு முன்பு தமிழக மாநில வரி வருவாயின் வளர்ச்சி 2013-14 & 2016-17 நிதியாண்டுகளுக்கு இடையில் 5.7% ஆக இருந்தது. செயல்படுத்தலுக்குப் பிறகு, கடந்த சில ஆண்டுகளில், வரி வருவாயின் வளர்ச்சி விகிதங்கள் 11.29% முதல் 16.68% வரை இருந்தன.
வருவாய் இவ்வளவு மேம்பட்டிருந்தாலும், திமுக அரசு 2021 முதல் ₹5 லட்சம் கோடிக்கு மேல் கடன்களைப் பெற்றுள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதில் தடையாக இருக்காது, மாறாக திமுக அரசின் நிறுவனமயமாக்கப்பட்ட ஊழல்தான் தடையாக இருக்கும் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். இருப்பினும், இப்போது உணர மிகவும் தாமதமாகிவிட்டது!எனதெரிவித்துள்ளார்.