டில்லி,

நாடு முழுவதும் 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல்காந்தி மத்திய அரசு உணர்வற்ற நிலையில் இருப்பதாக கூறி உள்ளார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாற்றுத்திறனாளி கள்  பயன்படுத்தும் வீல்சேர், பிரெய்லி டைப்ரைட்டர் போன்ற உபகரணங்களுக்கும் ஜி.எஸ்.டி.யில் வரிவிதித்திருப்பதன் மூலம், மத்திய அரசு உணர்வற்ற நிலையில் இருப்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை முழுவதும் திரும்பப் பெற வேண்டும். வரி விதிப்பால் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அவசர கதியில் ஜிஎஸ்டி அமல்படுத்தி உள்ளதாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கண்டித்து வரும் வேளையில், அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவரான ராகுல்காந்தி, மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்களுக்கு வரி விதித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது தலைநகரில் பரபரப்பாக பேசப்படுகிறது.