சென்னை
கூடுவாஞ்சேரி முதல் செட்டிபுண்ணியம் வரை உள்ள சாலை அகலமாக்கும் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கி உள்ளது.
சென்னையைத் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஜி எஸ் டி சாலையில் போக்குவரத்து மிகவும் அதிகமாக உள்ளது. இங்கு தினசரி 2 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருவதால் பலமுறை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்து வருகிறது.
அவ்வகையில் ஏற்கனவே பெருங்களத்தூர் முதல் கூடுவாஞ்சேரி வரை உள்ள ஜி எஸ் டி சாலைப்பகுதி அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் இன்னும் 3 மாதங்களில் முடிவடைய உள்ளது. அடுத்த கட்டமாக கூடுவாஞ்சேரி முதல் செட்டிபுண்ணியம் வரை உள்ள 13.5 கிமீ தூரமுள்ள சாலைப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது., ரூ.209.32 கோடி செலவில் நடைபெற உள்ள இந்த பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறை நடத்தி வருகிறது.
இது குறித்து துறை அதிகாரி ஒருவர், “தினசரி இந்த சாலையில் கார்கள் மட்டும் 1.92 லட்சம் செல்கின்றன. எனவே இந்த சாலையை அகலப்படுத்துவது அவசியமாகி உள்ளது. இதன் மூலம் சாலை ஓரங்களில் சேவை பாதை அமைக்கப்படுவதால் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது. அத்துடன் இந்த பகுதியில் பேவர் பிளாக்குகள் பொருத்தப்பட்டு மழை நீர் சேமிப்பும் நடைபெற உள்ளது. இந்த பணிகளை ஒரு வருடத்தில் முடிக்க வசதியாக மூன்று ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காகச் சாலை ஓரமுள்ள 1 முதல் 3 மீட்டர் அகலத்துக்கு ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த சாலை அகலப்படுத்தும் பணிக்கு இந்த ஆக்கிரமிப்புக்கள் அகற்றல் மட்டுமே போதுமானது. நிலம் கையகப்படுத்த தேவை இல்லை. இந்த சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் ரூ.21.37 கோடி செலவில் அகற்றி வேறு இடங்களில் நடப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.