டில்லி
ஜி எஸ் டி குறைக்கப்பட்ட பின்பும் விலையக் குறைக்காத பிரபல பிட்சா நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்த்தில் நடந்த ஜி எஸ் டி கமிட்டி கூட்டத்தில் பல பொருட்களான ஜி எஸ் டி வரி விகிதம் குறைக்கப்பட்டது. அதில் உணவு விடுதிகள் மற்றும் பிட்சா விற்பனை நிலையங்களும் உள்ளடங்கும். சர்வ தேச அளவில் டோமினோஸ் பிட்சாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை இந்தியாவில் ஜுபிலியன் ஃபுட் ஒர்கஸ் நிறுவனம் நடத்தி வருகிறது.
ஜி எஸ் டி வரி விகிதம் குறைப்புக்கு பின்னரும் இந்த நிறுவனம் ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்ட பின்பும் விலையைக் குறைக்கவில்லை என புகார் எழுந்தது. முன்பு 18% ஜி எஸ் டி இருந்த போது உள்ள விலையையே தற்போது 5% ஜி எஸ் டி ஆக மாற்றப்பட்ட பிறகும் வசுலிப்பதாக கூறப்பட்டது. இதை ஆராய்ந்த ஜி எஸ் டி யின் கீழுள்ள பொதுத்துறை பாதுகாப்பு இயக்குனரகம் ஜுபிலியன் ஃபாஸ்ட் ஃபுட் ஒர்க்ஸ் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
அந்த நோட்டிசில், “பிட்சா உட்பட பல உணவுப் பொருட்களுக்கு முந்தைய 18% ஜி எஸ் டி தற்போது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவே வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பிருந்த அதே விலையில் இன்னும் பிட்சா விற்கப்படுகிறது. இது குறித்து உடனடியாக விளக்கம் தேவை” என குறிப்பிடப் பட்டுள்ளது.
இது குறித்து அந்த பிட்சா நிறுவனம், “முன்பு நாங்கள் செலுத்திய வரியை திரும்பப் பெறும் வகையில் 18% ஜி எஸ் டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜி எஸ் டி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் செலுத்திய வரிகளை திரும்பப் பெறும் வசதி நீக்கப்பட்டுள்ளது எனவே நாங்கள் செலுத்திய வரியை எங்கள் பிட்சாவுடன் சேர்த்து நாங்கள் விலை நிர்ணயம் செய்துள்ளோம்” என பதில் அளித்துள்ளது.
இது போன்ற நோட்டிசுகள் மேலும் பல நிறுவனங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அனைவரும் இது போன்ற பதில்களை அளித்துள்ளனர். அவர்களின் பதில் சரியானது தானா என ஜி எஸ் டி கமிட்டி ஆராய்ந்து வருகிறது. இந்த ஆய்வு மேலும் 3 மாதங்கள் வரை தொடரும் என தெரிய வந்துள்ளது,