டில்லி,
நாளை நள்ளிரவு நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி அறிமுக விழா கூட்டத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சியான திமுகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடுமுழுவதும் ஜூலை 1–ந் தேதி (நாளை மறுதினம்) முதல் ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுகிறது. இதன் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நாளை (30ந்தேதி) நள்ளிரவு 11 மணிக்கு பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த அறிமுக விழா நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், ஜிஎஸ்டி விவகாரத்தில் மத்திய அரசு அவசரப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. ஜி.எஸ்.டி-யின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் என்னவென்று கண்காணிக்க 6 மாத காலம் ஆகும்.
மேலும், வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறு மற்றும் குறு தொழில் முனை வோர்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னி றுத்தியுள்ள திரினாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பவில்லை என புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், விழாவில் பங்கேற்பது குறித்து, இன்று காலை காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுத்த முடிவுபடி, ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியில் காங்கிரஸ் கலந்துகொள்ளாது என்று அறிவித்து உள்ளது.
அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம் என்று திமுகவும் அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக ராஜ்ய சபா எம்பி டிகேஎஸ் இளங்கோவன் கூறும்போது, இது ஒரு வெற்று விளம்பர விழா என்று கூறினார்.
பிரதான எதிர்க்கட்சி உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஜிஎஸ்டி விழாவை புறக்கணிப்பது காரணமாக மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.