டில்லி

ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை அளிக்கும் அளவுக்கு ஜிஎஸ்டி வருமானம் வரவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தினால் ஒரே நாடு ஒரே வரி என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.    இவ்வாறு ஜிஎஸ்டி அமலாக்கம் செய்வதால் மாநிலங்களுக்கு வரவேண்டிய தனிப்பட்ட வரி வருமானம் முழுவதுமாக நின்று போகும் நிலை இருந்தது.  இதனால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாநில வருவாய்க்கு ஏற்ப இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான், கேரளா, டில்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் தங்களுக்கு வரவேண்டிய இழப்பீட்டுத் தொகை சில மாதங்களாக வழங்கப்படவில்லை எனவும் அதை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தன.   இந்த ஐந்து மாநிலங்களும் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்கள் என்பதால் இந்த விவகாரம் கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

நடப்பு நிதியாண்டான 2019-20 மத்திய அரசு ரூ. 6,63,343 கோடி ஜிஎஸ்டி மூலம் வருமானம் வரும் என கணக்கிட்டிருந்தது.   ஆனால் கடந்த 8 மாதங்களில் சுமார் 50% மட்டுமே வருமானம் வந்துள்ளது.  இதனால் இழப்பீடாக ரூ.1,09,343 கோடி வருமானம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.64,528 கோடி மட்டுமே வருமானம் வந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டை வழங்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாகப் பஞ்சாப் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.  இது மேலும் பரபரப்பை அதிகமாக்கியது.  இந்த விவகாரம் குறித்து மேலே குறிப்பிட்ட மாநிலங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில், “மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் அளவுக்கு ஜிஎஸ்டி கூடுதல் வரி வசூல் மூலம் வருமானம் வரவில்லை.  எனவே தற்போது இழப்பீடு வழங்க இயலாத நிலை உள்ளது.  இந்த மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க உள்ளோம்.   கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி இழப்பீடு தொகை முன்பு இருந்ததை விட அதிகரித்து வருகிறது.   ஆனால் அந்த அளவுக்கு வருமானம் அதிகரிக்கவில்லை.

இது குறித்து மாநிலங்களின் கருத்தை இந்த மாதம் 6 ஆம் தேதிக்குள் கவுன்சிலுக்கு அனைத்து மாநிலங்களும் அனுப்பி வைக்க வேண்டும்.   இந்த கருத்துக்கள் அனைத்தும் ஜிஎஸ்டி குழுவினர் முன்பு வைக்கப்பட்டு விவாதிக்கப்படும்.   இந்த கருத்துக்களின் அடிப்படையில் ஜிஎஸ்டி வருமானம் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதன் மூலம் இழப்பீடு தொகை மாநிலங்களுக்கு வழங்கப்படும்” என அறிவித்துள்ளது.