டில்லி,
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புகான ஆலோசனை கூட்டம் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தங்கம்: 4% வரியும், மளிகை பொருட்கள்: 6% வரியும், புகையிலை & கார் & ஆடம்பர பொருள்: 26% வரியும் விதிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஏற்கனவே நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்கும் ஜிஎஸ்டி மசோதா இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவுக்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டார். பெரும்பாலான மாநிலங்களிலும் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. அதையடுத்து ஜிஎஸ்டி சம்பந்தமான துணை மசோதாக்கள் வர இருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நாடு முழுவதும் ஒரே சீரான முறையில் வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வரி விதிப்பு நிர்ணயம் மற்றும் அமல்படுத்துவது பற்றி முடிவு செய்வதற்காக நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குழு அமைக் கப்பட்டுள்ளது. இதில் மாநில நிதி மந்திரிகள் உறுப்பி னர்களாக உள்ளனர்.
இதையடுத்து மாநிலங்களின் கருத்துக்களை அறிய 3 நாட்கள் மாநாட்டை மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த குழுவின் 3 நாள் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது.
நேற்று நடந்த முதல் நாள் கூட்டத்தில் 6, 12, 18, 26 சதவீதம் என 4 வகையான வரி விகிதங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
வரி விதிப்பு தொடர்பாக முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த்சுப்பிரமணியன் அறிக்கையில் ஆடம்பர பொருள்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்து இருந்தார். நேற்றைய கூட்டத்தில் இதுபற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
40 சதவீதம் வரி விதிப்பை கேரள நிதி மந்திரி தாமஸ் ஈசாக் எதிர்த்தார். உத்தரபிரதேச மந்திரி 40 சதவீதம் விதிக்கலாம் என்றார். முடிவில் 26 சதவீதம் வரி விதிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது.
எனவே கார் போன்ற ஆடம்பர பொருள்களுக்கும் புகையிலை போன்ற சில வகையான பொருள்களுக்கும் 26 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
பொது மக்களின் அத்தியா வசிய பொருள்கள் மற்றும் உணவு பண்டங்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. பொது மக்கள் பயன்படுத்தும் வரி விலக்கு பெறும் பொருட்கள் பட்டியலில் 92 வகையான பொருட்கள் இடம் பெற் றுள்ளது.
இதில் 50 சதவீதம் உணவு பொருட்கள் ஆகும். தங்கத்துக்கு மிகக்குறைந்த அளவில் 4 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
டாக்சி மற்றும் ஆட்டோ கட்டணங்களில் 6 சதவீதம் வரி விதிக்கலாம் என்றும் யோசனை தெரிவிக்கப் பட்டது. பொருட்கள் அதிக அளவு உற்பத்தியாகும் மாநிலங்கள் இந்த வரி விதிப்பு பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தொழில் அதிபர்கள் ஆடம்பர பொருள்களுக்கு 26 சதவீதத்துக்கும் அதிகமான வரி விதிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடுகு, எண்ணை, கடலை எண்ணை, தேங்காய் எண்ணை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணை வகைகள், நெய், வெண்ணை போன்ற சமையல் எண்ணைகள், பருப்பு வகைகள், சிக்கன், காபி தூள், டீத்தூள் ஆகியவற்றுக்கு 6 சதவீதம் வரிவிதிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்றும், நாளையும் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.