டெல்லி: ஜிஎஸ்டி மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 185 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 7000 நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும ஜி.எஸ்.டி.,யின் கீழ், 1.20 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். கொரேனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக, ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு மார்ச் முதல் கடுமையாக சரிந்தது. பின்னர் தளர்வுகள் அறிக்கப்பட்டதும், சற்று மேம்படத் தொடங்கியது. அதிகப்பட்சமாக 2020 டிசம்பரில் 1.15 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்து சாதனை படைத்தது. இது இந்திய பொருளாதார முன்னேற்றத்தை காண்பிப்பதாக மத்தியஅரசு தெரிவித்தது.
அதத்தொடர்ந்து, வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. ஏற்கனவே ஜி.எஸ்.டி., முறையில் பல மோசடிகள் நடப்பது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், இதை தடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. பின்னர் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பல நிகழ்வுகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. அதில், போலி பில்கள் தயாரிப்பது அதிகளவில் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகையை எடுக்கத் தொடங்கியது.
இதுகுறித்து மத்திய நிதிச் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே செய்தியளார்களிடம் கூறியதாவது, வணிகள் வரி ஏய்ப்பு செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தற்காலிகமாக வேண்டுமானால் தப்பிக்கலாம். ஆனால், முழுமையாக தப்பிக்க முடியாது. வருமான வரி, சுங்க வரி உட்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை மோசடி கொள்முதல் பில்களை உருவாக்கி ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ததாக 7000 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டு விற்பனை 500 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள நிறுவனங்கள், மின்னணு பில்களை மட்டுமே பயன்படுத்துவது, கடந்தாண்டு, அக்டோபரில் கட்டாயமாக்கப் பட்டது. வரும், ஏப்ரல் மாதம் முதல், 55 கோடி ரூபாய் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட உள்ளது. இவ்வாறு கடும் கட்டுப்பாடுகள், நடவடிக்கைகள் எடுத்ததாலேயே, டிசம்பர் மாத வரி வசூல் அதிகரித்துள்ளது. வரி வசூல் அதிகரிப்பது, பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என்பதை உணர்த்தி உள்ளது. ஜி.எஸ்.டி., ஏய்ப்பு செய்வோர், வருமான வரி ஏய்ப்பும் செய்வர் என்பதால், ஜி.எஸ்.டி., சோதனை நடந்த இடங்களில், வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகளும் சோதனை மேற்கொள்ள உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.