2017 ம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதிலிருந்து. போலி ரசீதுகள் மூலம் குஜராத் மாநில கஜானா காலி செய்யப்பட்டுள்ளது.
2021 டிசம்பர் வரை 1,875 போலி நிறுவனங்களின் போலி ரசீதுகள் மூலம் 32,310 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்திருப்பதாக கண்டறிந்துள்ள அதிகாரிகள் இதன்மூலம் ரூ. 4,262 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மோசடியான உள்ளீட்டு வரி வரவு கோரிக்கை மூலம் அரசின் கஜானா காலியானதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையில் உள்ள ஓட்டைகளை அடைக்க மத்திய மாநில அரசுகள் கொள்கை அடிப்படையிலான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகின்றன. இருந்தபோதும், தொடர்ந்து மாறிவரும் செயல் முறை, ஆண்டுதோறும் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிகையை அதிகரிக்கவே செய்துள்ளது.
வணிக நிறுவனங்களின் இருப்பு குறித்த முகவரி சரிபார்ப்பு ஏதும் இல்லாமல் ஜி.எஸ்.டி. பதிவுகளை வழங்கும் செயல்முறையில் 2020 டிசம்பரில் கொள்கை மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் முகவரி சரிபார்ப்பு என்பது இயலாத காரியமாக உள்ளது என்பது ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது.
2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, மாநில அதிகாரிகளால் சுமார் 1,172 போலி பில்லிங் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இது முந்தைய மூன்று ஆண்டுகளின் எண்ணிக்கையை விட (2018-19, 2019-20, மற்றும் 2020-21) 67% அதிகரிப்பைக் காட்டுகிறது என்று எஸ்ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“சோதனைச் சாவடிகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் சுமார் 39 நடமாடும் குழுக்கள் சமீபத்தில் நிலைநிறுத்தப்பட்டு, மாநிலங்களுக்கு இடையேயான சரக்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றது” என்று மாநில வணிக வரி ஆணையர் மிலிந்த் டோர்வானே கூறியுள்ளார்.
“வரி ஏய்ப்பு சாத்தியம் உள்ள பொருட்கள் மீது உன்னிப்பாகக் கண்காணித்து வரும் இந்த குழுவிற்காக 24 மணிநேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை ஒன்று செயல்பட்டு வருகிறது” என்றும் டோர்வானே தெரிவித்தார்.