டெல்லி:  ஜிஎஸ்டி இழப்பீட்டை எதிர்கொள்வதற்காக தமிழகம் உள்பட 23  மாநில அரசுகளுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. பத்தாவது தவணையாக  இந்த ரூபாயை விடுவித்து இருப்பதாக மத்திய அரசு  தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம்,  ஜிஎஸ்டி வசூல் தொடர்பாக ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில், மாநிலங்கள், மத்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு ஏற்பாட்டின்படி, நியாயமான வட்டியில், கடன் பெற்றுக்கொள்வது மற்றும், 2021 நிதியாண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.2.35 கோடி இழப்புத் தொகையை கடனாக பெற்றுக் கொள்ளுதல் குறித்து கடந்த ஆண்டு (2019) செப்டம்பரில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.

அப்போது பேசிய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன், “கடனுக்கான வட்டியானது, ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தலில் இருந்து, 5 ஆண்டுகளுக்குப் பிறகு வசூலிக்கப்படும் வரியிலிருந்து செலுத்தப்படும். மாநிலங்களின் மீது கூடுதல் சுமை இருக்காது” என்றும் கூறியிருந்தார்.

ஜிஎஸ்டி முறையை செயல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம் மத்திய அரசு இந்தக் கடனை வாங்குகிறது.

இதுவரை இந்த சாளரத்தின் கீழ், 60 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு கடனாக பெற்றுள்ளது.  ஏற்கனவே  9 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 10வது தவணையாக ரூ.6ஆயிரம் கோடி ரூபாய் விடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள தமிழகம் உள்பட  23 மாநிலங்களுக்கு 5 ஆயிரத்து 516 கோடி ரூபாயும், ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் (டெல்லி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) ரூபாய் 483.40 கோடி ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

இதர ஐந்து மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிம் ஆகியவற்றுக்கு சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தாததால் எந்த விதமான வருவாய் பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு ள்ளது.

மேலும், மொத்த மாநில உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடனாக பெற்றுக்கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரத்து 627 கோடி கடனாக பெற அனுமதி அளிக்கப்பட்டு, தற்போதுவரை 3 ஆயிரத்து 870 கோடிவரை கடன் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.