புதுடெல்லி:
ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என பிரதமர் மோடி கூறினார்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதா  மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும்  நிறைவேறியிருப்பதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற இரு அவைகள்
பாராளுமன்ற இரு அவைகள்

இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளித்த அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், அக்கட்சிகளின் எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே கொண்டு வந்த இந்த சரக்கு சேவை வரி விதிப்பு மசோதாவுகக்கு தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. தற்போது அதில் சில திருத்தங்களுடன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் கருத்தொற்றுமை ஏற்பட்டதால், தற்போது இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மசோதா நிறைவேறியது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது: “நீண்டகாலமாக நிலுவையில் இருந்த ஜிஎஸ்டி மசோதா, மாநிலங்களவையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவொரு வரலாற்று நிகழ்வாகும். மசோதாவுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
பிரதமர் மோடி, அருண்ஜேட்லி, நவநீதிகிருஷ்ணன்
பிரதமர் மோடி, நிதி அமைச்சர்  அருண்ஜேட்லி, அதிமுக நவநீதகிருஷ்ணன்

மசோதா நிறைவேறியதற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வவரவேற்றுள்ளார்.  “ஒரு நாடு, ஒரு வரி என்ற கொள்கைக்கு நம்மை ஜிஎஸ்டி மசோதா வழிநடத்திச் செல்லும்; மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிப்பதுடன், அவைகளின் வருமானத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஏழைகளுக்கு பலனளிக்கும் இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளிடையேயும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தியதற்காக பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா குறித்து 7 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. பெரும்பாலான மாநிலங்கள் ஜிஎஸ்டி மசோதாவை ஆதரித்தன. தமிழகம் மசோதாவை எதிர்த்தது. தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்.பி. நவநீதி கிருஷ்ணன், “இந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா செல்லாது என்றும், இது மாநில அரசுகளின் நிதி சுயாட்சிக்கு எதிரானது. இது தமிழகத்துக்கு நிரந்தர இழப்பை ஏற்படுத்தும். ஆகையால், இதை எதிர்க்கிறோம்’ என்றார்..
விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு மூலம் மசோதா  நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக  காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளைச் சேர்ந்த 203 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.  எதிர்ப்புத் தெரிவித்து யாரும் வாக்களிக்கவில்லை.
வாக்கெடுப்புக்கு முன்னதாக, மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
மசோதாவில் மத்திய அரசு கொண்டு வந்த 6 திருத்தங்களுக்கும் மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.