புதுடெல்லி: இந்தியாவின் இரண்டாவது பெரிய மருந்து பிராண்டான, அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலுக்கு பரிந்துரை செய்யப்படும் ‘சினடாக்’ என்ற மாத்திரை விநியோகத்தை நிறுத்துவதென்று முடிவுசெய்துள்ளது பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கே.
ரேனிடிடைன் அடிப்படையிலான மருந்துகளில் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகள் கலந்திருப்பது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஆய்வுசெய்து வருவதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மருந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் சினடாக் மாத்திரைகளை(150 மி.கி. மற்றும் 300 மி.கி.) தனாக முன்வந்து திரும்பப் பெற்றுக்கொள்ளும் பணியைத் தொடங்கியுள்ளது அந்நிறுவனம்.
அமிலத்தன்மை தொடர்பான இருமல், அஜீரணம், வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு, இந்தியாவில் மருத்துவர்கள் பொதுவாக பரிந்துரை செய்யும் மாத்திரையாக உள்ளது சினடாக்.
ஏஐஓசிடி அமைப்பினுடைய கணக்கீட்டின்படி, இந்தாண்டின் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தின்படி சினடாக் விற்பனை ரூ.200 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. சினடாக் மாத்திரையில் இருப்பதாக கூறப்படும் பிரச்சினை குறித்து, ஜிஎஸ்கே நிறுவனத்திடம் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் தொடர்புகொண்டு பேசியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.