ஸ்ரீஹரிகோட்டா:
ஜிசாட் செயற்கைக் கோள் தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தகவல் தொடர்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
தகவல் தொடர்புக்கு பயன்படும், ‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக்கோளை , ஜி.எஸ்.எல்.வி. எப்.8 ராக்கெட் கடந்த மாதம் 20ந்தேதி சதீஸ்தவான் வின்வெளி நிலையம் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அன்றுமாலை 4.56க்கு விண்ணில் ஏவப்பட்டது. பிறகு, ராக்கெட்டில் இருந்து பிரிந்த செயற்கைக்கோள் வெற்றி கரமாக புவி வட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக 2வது கட்டச் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்திய 4 நிமிடங்களுக்குப் பின் செயற்கைக் கோளுடனான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப் பட்டது.
இதனால் செயற்கைக் கோளை மூன்றாம் கட்டமாகச் சுற்றுப்பாதைக்குக் கொண்டுசெலுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்த இஸ்ரோ, செயற்கைக் கோளில் உள்ள மின்னாற்றல் அமைப்பு செயல்படாததால் தான் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறியது. மேலும், அதை சரி செய்து, செயற்கைக் கோளுடன் இணைப்பை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செயற்கைக் கோளின் தகவல் தொடர்பு மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இதற்கான திட்ட அமைப்பினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர் என்றும், விண்வெளி ஆராய்ச்சி அமைப்புத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அதி நவீன வசதிகளுடன்கூடிய ‘ஜி சாட்-6 ஏ’ என்ற செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.