புது தில்லி: 
காவிரி பிரச்சினை தீர சொட்டு நீர் பாசன முறையை அமல்படுத்த காவிரி உயர் தொழில்நுட்ப குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
காவிரி விவகாரத்தில், தமிழகம்,கர்நாடகாவில் ஆய்வு நடத்திய, உயர் மட்ட தொழில் நுட்பக் குழுவினர், உச்ச நீதிமன்றத்தில், இன்று ஆய்வு அறிக்கை தாக்கல் செய்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய நீர்வள கமிஷனர் சி.எஸ்.ஷா தலைமையில், காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை மத்திய அரசு அமைத்தது. இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் உயர்அதிகாரிகள் இடம் பெற்றனர்.

தமிழக அரசு சார்பில், பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிர மணியன் ஆகியோர் இடம் பெற்றனர். உயர்மட்டக் குழுவினர், 7, 8ம் தேதிகளில், கர்நாடக மாநிலத்திற்கு சென்று, அங்குள்ள அணைகள், காவிரி பாசன பகுதிகளை ஆய்வு செய்தனர்.  கடந்த, 9ல், தமிழகம் வந்த குழுவினர், மேட்டூர், பவானிசாகர் அணைகளையும், டெல்டா மாவட்டங் களான, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினத் தில் உள்ள காவிரி பாசன பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவினர், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நேரில் ஆய்வு செய்த பிறகு உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆய்வறிக்கையை தாக்கல் செய்தனர்.
மத்திய குழு சுப்ரீம் கோர்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அதிலுள்ள முக்கிய அம்சங்கள்:
1) இரண்டு மாநிலங்களிலுமே வறட்சி நிலவுகிறது.
2) தமிழகத்தில் ஒரு போக சம்பாவுக்கு மேலும் தண்ணீர் தேவைப்படுகிறது.
மே மாதம் வரையிலும் குறைந்தது 143 TMC தண்ணீர் தேவை.
3) மேட்டூரில் 30 TMC தண்ணீர் இருக்கிறது.
4) கர்நாடகாவில் 32 TMC தண்ணீர் உள்ளது.
5) கர்நாடகாவில் 42 தாலுகாகள் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டியாவில் விவசாயிகள் தற்கொலைகள் செய்துள்ளனர்.
6) பாசான முறை நவீனப்படுத்தப்பட்டால்தான் தண்ணீரை சேமிக்க முடியும்.
இந்த அறிக்கை தமிழகத்துக்கு பின்னடைவானதுதான். எனவே, மேலும் தண்ணீர் திறக்க கோர்ட் உத்தரவிடுவது சந்தேகமே.
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை நடந்தால் அதனை தனிப்பட்ட குடும்ப பிரச்சனை என்று பதிவு செய்யாமல் விடுவதும், வறட்சி பகுதிகளை அறிவிக்காததும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 ஆய்வறிக்கையின் விவரம்:
தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு 133 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. அதோடு, தமிழகத்தின் குடிநீர் தேவைக்காக 22 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது.
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தமிழகம், கர்நாடகாவில்  விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கர்நாடகாவைப் பொறுத்தவரை மாண்டியாவில் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 42 தாலுகாக்களை வறட்சி பாதித்தவையாக அறிவித்துள்ளது கர்நாடக அரசு.
தமிழகத்தின் கடலோ பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாக மாறியுள்ளது. இதனால் குடிநீருக்கும், சாகுபடிக்கும் மேட்டூர்  அணையை மட்டுமே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீர் மேலாண்மையில் புதிய முறையை செயல்படுத்த வேண்டும் என்றும், விவசாயத்துக்கு சொட்டு நீர் பாசன முறையை செயல்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்நாடகாவில் 4.27 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு 36 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் போதிய மழையின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
கர்நாடகாவிலும் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் கால்நடைகளுக்கு நீர் இல்லை, விவசாய தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. மேலும் வடகிழக்கு பருவமழை நீரை சேமிக்க தமிழக கடலோர மாவட்டங்களில் ஏரி, குளங்களை அமைக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அணைகளில் நீர் அளவு:
கர்நாடக அணைகளில் அக்டோபர் 13-ல் 22.90 டி.எம்.சி நீரும், மேட்டூரில் 31.6 டி.எம்.சி நீரும் இருந்தது. 2017ம் ஆண்டு வரை கர்நாடகத்தில் 65.48 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவைக்கு 2017 மே வரை 143.18 டி.எம்.சி  தண்ணீர் தேவைப்படுவதாகவும் தெரிவித்து உள்ளது.