புதுடெல்லி:

அதிகரித்து வரும் இந்தியாவின் பொறுமை போர் சூழலை உருவாக்கும் என முன்னாள் வடக்கு பிராந்திய லெப்டினன்ட் ஜெனரல் டிஎஸ். ஹுடா எச்சரித்துள்ளார்.


இந்திய தேசிய பாதுகாப்பு வியூகம் குறித்து ஹுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் ஆதரவுடன் நடக்கும் தீவிரவாதத்தை எதிர்கொள்ள புதிய வியூகத்தை கையாள வேண்டும் என்பதை பிப்ரவரி 14-ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதல் உணர்த்தியிருக்கிறது.

இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள ராணுவ நடவடிக்கை அவசியம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வரும் வகையில் அழுத்தம் கொடுக்க நீண்ட கால யுக்தி தேவைப்படுகிறது.

ராஜ்ய மற்றும் பொருளாதார தடைகள் மூலமே பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வர முடியும். ஜம்மு மற்றும் காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் பிரச்சினை, உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

2001-ம் ஆண்டு காஷ்மீர் வன்முறையில் இறந்தோரின் எண்ணிக்கை 4,500-ஆக இருந்தது. எனினும் 2012-ல் இந்த எண்ணிக்கை குறைந்தது.

ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக காஷ்மீரில் வன்முறை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிப்பதும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு பிரிவினர் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபமும் எல்லையில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட காரணமாகியிருக்கிறது.

சீனாவுடனான எல்லை குறித்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. சரியான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை வரையறுப்பதை மையப்படுத்தியே பேச்சுவார்த்தை அமைய வேண்டும்.

எல்லை அத்துமீறல் இருந்தால் இந்தியா கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். இந்திய ராணுவத்தில் பற்றாக்குறை உள்ளது. பெரும்பாலான ஆயுதங்கள் பழமையானவை. விமானப் படையில் படை வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

திறனுள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள் இன்றி கப்பற்படை உள்ளது. கடல் வழி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். ஏவுகணை பாதுகாப்பு முறையை இந்தியா செயல்படுத்த வேண்டும்.  மேலும் விளக்கம் தேவைப்பட்டால், எங்கள் குழுவினர் உதவுவார்கள்” என்றார்.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா கூறும்போது, “லெப்டினென்ட் ஜெனரல் ஹுட் அறிக்கையை இணையத்தில் காங்கிரஸ் வெளியிடும். இந்த அறிக்கை மீது அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கலாம். ஹுட்டுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.