சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயம் காரணமாகவே, தமிழகத்தில் அமைதியை குலைக்க  பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலையின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டிருந்தது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரசியல்கட்சியினர், பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

இந்த நிலையில், பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு  மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டவர்கள், அமைதியைக் குலைக்கும் வகையில் இழிவான செயல்களில் ஈடுபடுவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருந்தது.

அத்தகைய இழிவான செயல்களின் முன்னோட்டமாகத் தெரிகிறது. மிக மோசமான இந்தச் செயலை தி.மு.க வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் மூலம், தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து, வன்முறையைத் தூண்ட நினைக்கும் சக்திகளை ஒடுக்க வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.

பெரியார் சிலையைச் சிதைத்த காலிகளை, காவல் துறை மூலம் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வன்முறைக்குத் துளியும் இடம்தராத வகையில், அத்தகைய தீய எண்ணத்தில் இருக்கும் நாசகார சக்திகள் எதுவாக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி, இரும்புக் கரம்கொண்டு முறியடிக்கப்பட வேண்டும், நசுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.