சென்னை: குரூப் 4 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம், தேர்வர்களின் போர்க்கொடிக்கு பிறகு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20ந்தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.  அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், குறுக்கெழுத்து தட்டச்சர், தண்டலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்து வருகிறது. முதலில் இந்த பகுதியில்  7,301 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டு (2022) தேர்வு நடந்தது.  இந்த தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர்.

ஆனால், ஏராளமான காலி பணியிடங்கள் இருப்பதால், காலிப் பணியிடங்களை மேலும் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.  இதை ஏற்று, இரண்டாவது முறையாக குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதன்படி, 10,117ஆக  கூறப்பட்டது. பின்னர் மேலும் காலி பணியிடங்கள் உயர்த்தி, மொத்தம் 10,748 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், அவை தேர்வு முடிவுகள் மூலம் நிரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  குரூப்4 பணியிடங்களுக்கு ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10,219 குரூப் 4 பணியிடங்களில் நிரப்ப கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

முழு விவகாரம் தெரிந்துகொள்ள கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யவும்…

Group4 Counceling 12-07-23