சென்னை,

டந்த 2016ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டது.  அப்போது,  குரூப் 1ன் தேர்வு விடைத்தாள் வெளியானது. இந்த  குற்றச்சாட்டை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த முறைகேட்டில் கோடிக்கணக்கான பணம் கைமாறியதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  குரூப்-1 விடைத்தாள் முறைகேடு காரணமாக தி.நகரில் செயல்பட்டு வரும் அப்பல்லோ ஸ்டடி சென்டரில் மத்திய குற்றப்பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே,  டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் சிவசங்கர், பெருமாள், இடைத்தரகர்கள் குமரேசன், பால்ராஜ், தேர்வர் ராம்குமார் ஆகியோர் கைதாகி உள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது,முறைகேடு நடந்த விதம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், தி.நகர் சி.ஐ.டி. நகரில் உள்ள அப்பல்லோ ஸ்டடி சென்டர் ((appollo)) என்ற பயிற்சி நிறுவனத்தில் மத்திய குற்றப்பிரிவினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிறுவனம் இடைத்தரகர்களுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.