சென்னை: தமிழகம் முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் நவம்பர் 25ந்தேதி முதல் நிறுத்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற 4.5 சதவீதம் கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட்டுக்கு பதிலாக 4.5 சதவீதம் கொழுப்புச் சத்துள்ள வயலட் நிறத்தி லான பால் பாக்கெட் அதே விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக, ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை படிப்படியாக குறைத்து வந்த ஆவின் தற்போது, வரும் 25ந்தேதி முதல் பச்சை நிற பாக்கெட்டை முழுமையாக நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.
தமிழக அரசின் நிறுவனமான ஆவின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதல் செய்யப்பட்டு, பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நீலம், பச்சை, ஆரஞ்சு என 4 வண்ணங்களில் கொழுப்பு சத்துடன் கூடிய ஆவின் பால் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அதன்படி, இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (1.5 சதவீத கொழுப்புச் சத்து), சமன் படுத்தப்பட்ட பால் (3 சதவீத கொழுப்புச் சத்து), நிலைப்படுத்தப்பட்ட பால் (4.5 சதவீதம் கொழுப்புச் சத்து) என நான்கு வகையாக ஆவின் பால் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆவின் பால் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகிறது. இதில், 4.5 சதவீதம் கொழுப்புச் சத்து) பச்சை நிற பாக்கெட் ஆவின் பால் பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இது மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக அமைந்துள்ளது. பச்சைநிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் 40 சதவீதம் இடம் பெற்று உள்ளது.
இந்த நிலையில், பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு பதிலாக அதே விலையில், ஆவின் டிலைட் ஊதா பாக்கெட் 3.5சதவீத கொழுப்புச் சத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பாலின் விலையும் லிட்டர் ரூ.44 ஆகும். ஆனாலும், பொதுமக்கள் கிரீன் மேஜிக் பச்சைநிற ஆவின் பால் பாக்கெட்டுகளை விரும்பி வாங்கி வருகிறார்கள். ஆனால், அந்த பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து வந்த நிலையில், தற்போது நிறுத்தப்போவதாக அறிவித்து உள்ளது.
இதுகுறித்து கூறிய ஆவின் பொது மேலாளர் (மார்க் கெட்டிங்) சுனேஜா, பால் அட்டை கார்டுதாரர்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி முதல் அதே விலையில் டிலைட் பால் வினியோகிக்கப்படும். டிலைட் பால் கார்டு விற்பனையை செயல்படுத்தவும், டிசம்பர் 16-ம் தேதி முதல் வினியோகத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தரப்படுத்தப்பட்ட பால் கார்டு வைத்திருப்பவர்கள் (பச்சை நிறம்) இருமுறை சமன்படுத்தப்பட்ட மற்றும் புல் கிரீம் பால் ஆகிய 3 வகைகளில் ஏதாவது ஒன்றிற்கு மாற வேண்டும்” என்று தெரிவித்தார்.
“ஆவின் நிர்வாகம் செலவை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளது. ஆவின் பால் அட்டைகள் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 15-ம் தேதி வரை பால் வினியோகம் செய்கிறது. நவம்பர் 25-ம் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை நிறுத்தப்படும். தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15-ந் தேதி வரை பெறுவார்கள்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.