சென்னை:

ரசு அனுமதி பெறாதவர்களுக்கு பேனர், போஸ்டர் அச்சடித்து கொடுத்தால், அச்சசடிக்கும் அச்சகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுக்குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு எண் 326(பிபி) படி அனுமதி பெற்ற பேனர் களை மற்றும் விளம்பரப் பதாகைகள் வைக்கவேண்டும். அப்படி வைக்கப்படும் பேனர்களில் அனுமதி எண், அனுமதி பெற்ற நாள், எண்ணிக்கை, அச்சகத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறுவது மிகவும் அவசியம்.

இதனை அனைத்து அச்சகங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பேனர்களை பொது இடங்களில் வைப்பது குறித்து நீதிமன்றமும் விதிமுறைகளை விதித்துள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நீதிமன்றத்தின் அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாத பேனர்களை அச்சடித்துக் கொடுத்தாலோ அல்லது அனுமதி பெறாமல் பேனர்கள் வைத்தாலோ தொழில் உரிம விதிகளுக்கு மாறாக அச்சடிக்கும் பணியினை மேற்கொள்ளும் அச்சகங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.