சென்னை வள்ளுவர்கோட்டம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான கட்டுமான பணிகளுக்கு ரூ. 195 கோடியை ஒதுக்கி கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. நில எடுப்பு பணிகளுக்காக ரூ. 113.19 கோடி மற்றும் மேம்பால கட்டுமான பணிகளுக்கு ரூ. 67.16 கோடி என ஒதுக்கீடு செய்தது.
வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக பாம்குரோவ் ஹோட்டல் முன்பாக தொடங்கி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடிவடையும் வகையிலும் மற்றொரு புறம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக உத்தமர் காந்தி சாலைக்கு சென்று சேரும் வகையில் 900 மீட்டரில் 4 வழி மேம்பலாமாக இது அமையவுள்ளது.
இந்த மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு, 8014 ச.மீ அரசு நிலம் மற்றும் 2883 ச.மீ தனியார் நிலம் தேவை என்று கண்டறியப்பட்டது.
இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது வள்ளுவர் கோட்டம் பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான டெண்டர் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து 18 மாதங்களில் இந்த மேம்பாலம் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.