மதுரை:
மதுரையில், கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட இரு நிறுவனங்களின் ரூ.44 கோடி சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து அமலாக்கத்துறையினர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
“மதுரையைச் சேர்ந்த சங்கர நாராயணன், பி.கே.எம்.செல்வம் ஆகியோர் எம்.எஸ்.கிரானைட், ஸ்ரீஐஸ்வர்யா ராக் எக்ஸ்போர்ட் ஆகிய பெயரில் இரு கிரானைட் நிறுவனங்களை நடத்தி வந்தார்கள். இவற்றின் மூலம் உரிய அனுமதியின்றியும், அரசின் விதிமுறைகளை மீறியும் மதுரை மாவட்டத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளார்கள்.
மதுரை காளிகாப்பான், பூலாங்குளம் ஆகிய பகுதிகளில் வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களில் இந்த நிறுவனங்கள் எந்த அனுமதியும் இன்றி கிரானைட் குவாரிகளை நடத்தி வந்தன. இந்த முறைகேடு குறித்து மதுரை போலீசார் இரு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் இரு நிறுவனங்களும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியிருப்பதும், நீர்நிலைகளை அழித்ததும், தடை விதிக்கப்பட்ட வெடி மருந்துகள் மூலம் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததும் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டத்தை இந்த நிறுவனங்கள் ஏற்படுத்தின.
போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தில் கிரானைட் குவாரி நடத்தியது, வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை வெளிநாடுகளுக்கு விற்று, அதன்மூலம் பணம் ஈட்டியது குறித்து அமலாக்கத்துறை விசாரணை செய்தது. அதில் இந்த இரு நிறுவனங்களும் முறைகேடான வழியில் பணம் ஈட்டியிருப்பதும், அந்த பணத்தை பல்வேறு சொத்துக்களில் முதலீடு செய்திருப்பதும் தெரிய வந்தது.
அதையடுத்து இந்த இரு நிறுவனங்களுக்கும் சொந்தமான ரு.43 கோடி மதிப்புள்ள 31 சொத்துக்கள், வங்கிகளில் உள்ள 37 நிரந்தர வைப்பு கணக்கில் இருக்கும் ரூ.1.52 கோடி ஆகியவை முடக்கப்பட்டது” என்று அமலாக்கத்துறையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.