திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்தேரோட்டம் இன்று (ஜீலை 8) கோலாகலமாக தொடங்கியது. இதில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம்படித்து இழுத்து, திருத்தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, ஆன்மிக சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லையப்பர் திருக்கோயில். இத்திருக்கோயிலில் ஆண்டின் 12 மாதங்களிலும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். இதில், ஆனி மாதம் நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில், இந்தாண்டு 519 வது ஆனி பெருந்தேரோட்டம் கடந்த ஜூன் 30 கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து, மகா மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அன்றிலிருந்து, சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளும் ரிஷப வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (ஜூலை 8) ஆனி பெருந்தேரோட்ட திருவிழா மிகவும் விமரிசையாக தொடங்கியது. முன்னதாக, அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் சுவாமி நெல்லையப்பர் தேரில் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட (சுமார் 570 டன்) தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். நெல்லையப்பர் தேரைத் தொடர்ந்து, காந்திமதி அம்பாள் தேர், விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய நான்கு தேர்களும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு பணிகள்:

தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி நகர ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில், 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரத்யேகமாக 3 ட்ரோன் கேமராக்கள், சிசிடிவி கேமரா உட்பட 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கோயில் உட்புறம் மற்றும் வெளிபுறம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சென்னை சாலையில் திடீரென ஏற்பட்ட நீண்ட பிளவு; அச்சத்தில் வீட்டைவிட்டு ஓடிவந்த மக்கள்! – என்ன காரணம்?
தொடர்ந்து, இப்பகுதியில் குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக, குற்றப்பிரிவு போலீசார் 10 குழுக்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, ஒலிப்பெருக்கி, எச்சரிக்கை பலகைகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ரத வீதிகளில் இரண்டு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கோவிலை சுற்றியுள்ள ரத வீதிகளில் 16 காவல் உதவி மையங்கள் (May I Help You) அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாநகர கட்டுப்பாட்டு அறை எண்கள் 100, 0462-2562651 மற்றும் டவுன் காலம் நிலைய எண் 9498101726-க்கு தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக்குழு, நடமாடும் கழிப்பறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.