சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தன்று மாநிலம்முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆக.15 சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் குடியரசு தினம், உழைப்பாளா் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு நான்கு நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆண்டுக்கு ஆறு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆகஸ்டு 15ந்தேதி அன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில், ஆட்சியர்கள் பங்கேற்கும் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையா மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தூய்மையான குடிநீர் விநியோகம், வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு, கட்டிட அனுமதி,சுய சான்றிதழ் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டும் . மேலும், சுயசான்று கட்டிட அனுமதி பெறு வதற்கான செயல்முறைகள், தமிழ்நாடு எளிமைப் படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாகவும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொது கட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படு வதை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Independence Day Gram Sabha Meeting Tamil Nadu Govt சுதந்திர தினம் கிராமசபை கூட்டம் தமிழக அரசு