சென்னை:
தமிழகத்தில் உள்ள 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகின்றன.
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் “மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்” என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
அதன்படி இந்த தேர்தலில் வென்று முதல்வராக பதவி ஏற்றவுடன் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று, டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டும் இயங்கும் என்றும் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடப்படும் என்றும் உத்தரவிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
இதன்படி டாஸ்மாக் கடைகளின் நேரக் குறைப்பு ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டது. மூடப்படும் கடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இப்போது அந்த கடைகள் முடிவு செய்யப்பட்டு மேலிடத்துக்கு அனுப்பப்பட்டன. அதன்படி இன்றுமுதல் அந்த 500 கடைகள் மூடப்படுகின்றன.
அதன்படி சென்னை மண்டலத்தில் 58 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 133 கடைகளும் மூடப்படுகின்றன. கோவை மண்டலத்தில் 60 டாஸ்மாக் கடைகளும், மதுரை மண்டலத்தில் 201 டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படுகின்றன.
இந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மாற்றுப் பணி குறித்த அறிவிப்பு பின்னர் தனி அரசாணையாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், “டாஸ்மாக் மதுக்கடை நேரத்தை காலை 10 மணியில் இருந்து 12 மணியாக்கியதால் எந்த வித பயனும் இல்லை. கள்ளச்சந்தையில் மது விற்பது அதிகரித்திக்கிறது. மதுக்கடை நேரத்தை மாலை 4 முதல் இரவு 9 வரை என்று மாற்றினால்தான் ஓரளவு பலன் இருக்கும்.
தவிர இப்போது 500 கடைகள் மூடப்பட்டிருப்பதும் கண்துடைப்புதான். ஏற்னவே வழக்கு பிரச்சினையில் உள்ள கடைகள், வருமானம் குறைவாக உள்ள கடைகள்தான் மூடப்பட்டுள்ளன. வருமானம் அதிகம் உள்ள கடைகள் மூடப்படவில்லை. சமீபத்தில் சென்னை மதுரவாயில் பகுதியில் டாஸ்மாக் கடையை மூட போராட்டம் நடத்திய பெண்கள் உட்பட அனைவரின் மீதும் கடுமையான தடியடி நடத்தப்பட்டது. கடுமையான பிிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டது. முன்தினம்கூட ராமநாதபுரம் முதுகளத்தூரில் டாஸ்மாக் கடையை மூட போராடிய மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த இரு சம்பவங்களுக்கு முன்பு மதுக்கடை மூடும் போாரட்டங்களில் ஈடுபட்டவர்களும் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டாமா” என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.