மும்பை: கோரேகான் பீமா விசாரணையை அரசு அம்பலப்படுத்துமோ என்ற அச்சத்தில் என்ஐஏவுக்கு மாற்றி இருப்பதாக என்சிபி தலைவர் சரத் பவார் கூறி உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:  அநீதிக்கு எதிராக பேசுவது நக்சலிசம் அல்ல. இது அம்பலப்படுத்தப்படக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது என்று நான் நினைக்கிறேன். எனவே வழக்கை என்ஐஏவுக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பரிஷத் வழக்கில் புனே போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்க வேண்டும் என்று பவார் கடந்த மாதம் கோரியிருந்தார்.

புனே காவல்துறையினரின் கூற்றுப்படி, 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டை மாவோயிஸ்டுகள் ஆதரித்தனர், நிகழ்வில் ஆற்றப்பட்ட உரைகள், மறு நாள் மாவட்டத்தில் உள்ள கொரேகான் பீமா போர் நினைவிடத்தில் சாதி வன்முறைக்கு வழிவகுத்தன.

எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சுதிர் தவாலே, ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், மகேஷ் ரவுத், ஷோமா சென், அருண் ஃபெரீரா, வெர்னான் கோன்சால்வ்ஸ், சுதா பரத்வாஜ் மற்றும் வரவர ராவ் ஆகிய 9 ஆர்வலர்களை புனே போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஆகியோர் மும்பையில் மூத்த போலீஸ் அதிகாரிகளை சந்தித்து கோரேகான் பீமா வன்முறை வழக்கை மறுஆய்வு செய்யவேண்டும் என்று கூறினர். அதற்கு மறுநாள் விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.