சென்னை:

மிழகத்தில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பல இடங்களில் பூத் சிலிப் வழங்கும் ஆசிரியர்கள் பொதுமக்களிடம் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் படி வலியுறுத்தி வருவதாக ஏராளமான புகார்கள் வருகின்றன. பூத் சிலிப் வழங்கும் பணியை பொதுவாக அரசு பள்ளி ஆசிரியர்களே வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், கெலமங்கலம் பகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில்  2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் உதவி தொடக்க கல்வி அதிகாரியாக உள்ள நாகராஜ் மற்றும் காவேரிப்பட்டணம் நெடுங்கல் பள்ளி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது தொடர்பான புகைப்பட ஆதாரத்துடன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய  மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிரபாகர் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் உத்தர விட்டுள்ளார்.

இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி விசாரணை நடத்தி ஆசிரியர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.