சென்னை

லைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்குத் தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு தற்போது 2 ஆம் மாத தவணைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழக அரசு இது குறித்து வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“தமிழக அரசின் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டமும், தேவையுள்ள ஒருவர்கூட விடுபடாமல் தகுதியான பயனாளிகளைச் சென்றுசேர வேண்டும் என்பதில் அரசு அதிக அக்கறையுடன் செயல்பட்டுவருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கும் தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000/- வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,65,21,98,000/- அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது.

உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்கப்பட்டு பணம் பெற்றவர்களில் சில தவறான தகவல்களைக் குறிப்பிட்டு இருந்ததாகவும், இறந்தவர்களின் பெயர்களில் விண்ணப்பித்து பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அத்தகைய 8,833 பேரை கண்டறிந்து அவர்களின் பெயர்களை அரசு நீக்கி இருக்கிறது.

மாதந்தோறும் இந்த திட்ட பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள்  ஆஉவு செய்யப்படும்,  ஆய்வில் வருமானம் உயர்வு, 4 சக்கரம் மற்றும் கனரக வாகனப்பதிவு, பத்திரப்பதிவு, அரையாண்டு அடிப்படையில் தொழில் மற்றும் மின்சார பயன்பாடு குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு விதி மீறல் இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்”

என அறிவிக்கப்பட்டுள்ளது.