டில்லி
பத்திரிகையாளர் பர்கா தத் குறித்த டிவிட் குறித்து புகார் அளித்த அரசு அதிகாரி ஆஷிஷ் ஜோஷி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர் கபில் மிஸ்ரா டிவிட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அதில் பத்திரிகையாளர் பர்கா தத், ஆர்வலர்கள் பிரசாந்த் பூஷன், கவிதா கிருஷ்ணன் மற்றும் ஷீலா ரஷித் ஆகியோர் உள்நாட்டு எதிரிகள் எனவும் அவர்களை ஒழிக்க வேண்டும் எனவும் பதிந்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இது குறித்து பர்கா தத் தன்னுடன் கல்லூரியில் படித்த அரசு அதிகாரி ஆஷிஷ் ஜோஷியிடம் புகார் அளித்தார். அவர் தற்போது தொலை தொடர்புத் துறையில் பணி ஆற்றி வருகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்புத்துறை கட்டுப்பாட்டாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
கபில் மிஸ்ராவின் டிவீட் குறித்து ஜோஷி டில்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இவ்வாறு புகார் அளித்த அடுத்த நாள் ஜோஷி அரசு பணியாளர் விதிகளை மீறியதாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த உத்தவில் அவர் மீது பல குற்றங்கள் சாட்டப்பட்டு அவை குறித்து விரைவில் விசாரணை நடைபெறும் எனவும் அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆஷிஷ் ஜோஷி, “இந்த உத்தரவால் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் வருத்தம் அடையவில்லை. இது குறித்து எனக்கு சம்மன் அல்லது விவரம் கேட்டு கடிதம் உள்ளிட்ட எதுவும் அளிக்கப்படவில்லை. அத்துடன் நான் எனது துறையின் கடிதத் தாள் மூலம் புகார் அளித்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளேன்.
நான் ஒரு அரசு அதிகாரி என்னும் முறையில் மற்றொரு சக அரசு அதிகாரியிடம் புகார் அளிக்கும் போது அந்த புகாரை எனது துறையின் கடிதத் தாள் மூலம் தான் அனுப்ப வேண்டும். நான் எனது கடமையை செய்துள்ளேன். அதனால் அரசின் இந்த பணியிடை நீக்கம் குறித்து எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.