புவனேஸ்வர்: அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு நிவாரண நிதியாக 500 கோடி ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அம்பான் புயலின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி கொல்கத்தா சென்றடைந்தார். விமான நிலையத்தில் ஆளுநர் ஜெக்தீப் தன்கர், முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆகியோர் வரவேற்றனர்.
பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின்னர் மேற்கு வங்கத்திற்கு 1000 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். பின்னர் அங்கிருந்து ஒடிசா புறப்பட்டுச் சென்றார்.
ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால் மற்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். பிறகு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். அவருடன் முதலமைச்சர் நவீன் பட்நாயக், அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் சென்றனர்.
ஆய்வுக்கு பின்னர் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு 500 கோடி நிவாரண நிதி தரப்படும் என்று அறிவித்தார்.
Patrikai.com official YouTube Channel