சண்டிகர்: டெல்லி போராட்டத்தில் பங்குகொண்டு உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்து உள்ளார். இதற்கு வரவேற்பும், எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடமாநில விவசாயகிள் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப் விவசாயிகள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். போராட்டம் இன்று 59-வது நாளாக தொடர்கிறது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பல விவசாயிகள், கடும்குளிர் உள்பட பல்வேறு உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயிகளின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது 76 விவசாயிகள் இறந்துள்ளனர். டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு நாங்கள் அரசு வேலை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என மாநிலஅரசு அறிவித்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும்போது, இயற்கையாக உயிரிழக்கும் நபரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுப்போம் என்று அறிவித்துள்ள நடவடிககை, போராட்டங்களை ஊக்குவிக்கும் செயல் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
அதே வேளையில் பஞ்சாப் முதல்வரின் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.